காம தகனம்
காம தகனம் பன்னிரெண்டு வயது குழந்தைகளான ராமனையும் லக்ஷ்மணனையும் , தந்தை நீ , நல் தாயும் நீ என்று தசரதன் விஸ்வாமித்ரனிடம் ஒப்படைக்க மூவரும் தருவனம் நோக்கி நடந்தார்கள் . சரயுவை தாண்டி ஒரு வனப் பகுதியை அடைந்ததும் ராமன் , இது என்ன இடம் என்று விஸ்வாமித்ரனிடம் கேட்கிறான் . நல்லவர்க்கும் , அடியவர்க்கு இரங்கும் , சந்திரனை தலையில் சூடிய சிவபெருமான் முன்பொரு காலத்தில் இங்கு தவம் ஏற்று இருந்தான் . அப்போது இந்த இடத்தில் இருந்து மன்மதன் மலர் கணைகளை தொடுக்கவும் அதனால் கோபமுற்ற சிவபெருமான் சினம் கொண்டு தன் நெற்றிக் கண்ணால் பார்க்க பூளை மலர் போன்ற மென்மையான மேனியுடைய மன்மதன் எரிந்து அங்கம் இழந்தவன் ஆனான் . “திங்கள் மேவும் சடைத்தேவன் மேல் மாரன் வேள் , இங்கு நின்று எய்யவும் , எரி தரும் நுதல் விழிப் பொங்கு கோபம் சுடப் , பூளை வீ அன்னதன் அங்கம் வெந்து , அன்று தொட்டு , அனங்கனே ஆயினான் .” மார வேள் - மன்மதன் , மக்க...