காம தகனம்
காம தகனம்
பன்னிரெண்டு வயது குழந்தைகளான ராமனையும் லக்ஷ்மணனையும் , தந்தை நீ, நல் தாயும் நீ என்று தசரதன் விஸ்வாமித்ரனிடம் ஒப்படைக்க மூவரும் தருவனம் நோக்கி நடந்தார்கள்.
சரயுவை தாண்டி ஒரு வனப் பகுதியை அடைந்ததும் ராமன், இது என்ன இடம் என்று விஸ்வாமித்ரனிடம் கேட்கிறான்.
நல்லவர்க்கும், அடியவர்க்கு இரங்கும், சந்திரனை தலையில் சூடிய சிவபெருமான் முன்பொரு காலத்தில் இங்கு தவம் ஏற்று இருந்தான்.
அப்போது இந்த இடத்தில் இருந்து மன்மதன் மலர் கணைகளை தொடுக்கவும் அதனால் கோபமுற்ற சிவபெருமான் சினம் கொண்டு தன் நெற்றிக் கண்ணால் பார்க்க பூளை மலர் போன்ற மென்மையான மேனியுடைய மன்மதன் எரிந்து அங்கம் இழந்தவன் ஆனான்.
“திங்கள் மேவும் சடைத்தேவன் மேல் மாரன் வேள்,
இங்கு நின்று எய்யவும், எரி தரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுடப், பூளை வீ அன்னதன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு, அனங்கனே ஆயினான்.”
மார வேள் - மன்மதன், மக்களுக்கு காமத்தால் மரண வேதனையை தருவதால் அவன் மாரன். அவனுடைய மெல்லிய பூளை வீ அன்ன மேனி - பூளை போன்ற காற்றிலே பறக்கக்கூடிய தன்மையுடைய மேனி சிவ பெருமானுடைய நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீயினால் எரிந்து அங்கம் இழந்து அநங்கன், உருவம் இல்லாதவன் ஆகிவிட்டான்.
இந்த இடத்துக்கு காமனாசிரமம் என்று பெயர்.இதனை ஒட்டியுள்ள நாடு அங்க நாடு என்றான் விஸ்வாமித்ரன்.
“இவண் எலாம் அங்கநாடு;
இதுவும் அக்காரணக் குறி உடைக் காமன் ஆச்சிரமமே.”
அடியவர்க்கு இரங்குபவன் சிவ பெருமான் என்பதை திங்கள் மேவும் சடைத்தேவன் என்று கம்பன் காட்டுகிறான்.
இதே ஒப்புமையை
“தேவமுனி ப்ரவரார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்”
என்ற லிங்காஷ்டகத்திலும் காணலாம்.
இதைக் கேட்டுக் கொண்டு காமச்சிராமத்தை தாண்டி மூவரும் சென்றார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக