நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
நாரத முனிவற்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்
நாகேர்கோவில் அருகில் உள்ள பூதப்பாண்டியில் தை மாதத்தில் நடக்கும் ப்ரஹ்மோத்சவத்திற்கு தனி சிறப்பு உண்டு. இந்த பகுதியிலேயே பெரிய தேரும், தை பூசத்தன்று நடக்கும் தெப்பமும் கண் கொள்ளா காட்சி.
இன்னும் ஒரு தனி சிறப்பு உண்டு. பத்து நாள் திருநாளும் சிவன் கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் ஒரு சேர நடை பெரும்.
அதுவும் ஏழாம் திருநாள் இன்னும் சிறப்பு வாய்ந்தது.
பூதலிங்க ஸ்வாமி உடனுறை சிவகாமி அம்மன் அன்ன வாகனத்திலும், அவள் சகோதரன் அழகிய பெருமாள் கருட வாகனத்திலும், அவள் நாயகன் நாரத முனிவற்கு ஏற்ப
நயம்பட உரைத்தவன் வாகனத்திலும் வீதி வலம் வருவார்கள்.
என்ன வாகனம்?
யார் நாரத முனிவற்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும் உடையவர்?
நாரதர் - சாமகானத்தை எப்போதும் பாடிக்கொண்டிருப்பவர்,
சொல்லாற்றல் மிக்கவர். ஒருவரை சமாதானப்படுத்தும் விதமாகவும், சாதுர்யமாகவும் பேசுவதில் வல்லவர். அத்தகைய ஆற்றல் உடையவர் இவர் என்கிறார் கவி சக்ரவர்த்தி.
திசை யானைகளை நேரில் பொருதி, போரிட்டு வென்று அதனுடைய தந்தங்கள் துளைத்த மார்பும், கயிலாய மலையை எளிதாக தன் தோள்களில் தாங்கியவன் என்றும், வெற்றி மாலையும் அதன் மேல் மகுடமும் அணிந்த பத்து தலைகளையும் உடையவன் என்றும், அவனுடைய தவ ஆற்றலைக் கண்டு சிவ பெருமான் அளித்த வாளை உடையவன் இவன் என்றும்,
வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்ததோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த
நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும்
இப்படி இடையறாது சாமவேதத்தை நாவில் தரித்தவன் தசமுகன் ராவணன் என்கிறான் கம்பன் .
ராவணன் கற்றறிந்தவன். சாம வேதத்தின் ஆயிரம் கிளைகளையும் நாவில் தரித்தவன். வேத விற்பனன்.
கலைகளில் சிறந்தவன்.
கலை என்றால் இசை!
கலை மீது கொண்ட காதலால் வீணையை கொடியில் கொண்டவன்.
சாம கானத்தை வீணையில் இசைத்தவன்.
வேதத்தை தன் தந்தை விஷ்ரவசுவிடம் கற்றவன்.
'நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்;
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து, அறிவு
அமைந்தாய்;
நீ அயன் முதல் குலம் - நீ பிரம்மனை முதல்வனாகக் கொண்ட குலத்தில் பிறந்தவன்.
ஒருவன் நின்றாய் - உனக்கு நிகர் ஒருவர் இல்லையென்ற அளவுக்கு தன்னிகரற்ற ஒருவனாய் நிற்கிறாய்.
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தாய் - ஆயிரம் கிளைகள் கொண்ட வேதத்தை கற்றவன். கற்றவன் என்றால் மனனம் செய்வது அல்ல. கற்று, மறையில் மறைந்துள்ள பொருளை உணர்ந்து, அதனால் மிகுதியான அறிவைப் பெற்றவன் என்று கும்பகர்ணனும் ராவணனை கற்றவன், வேதியன், கல்வியில் சிறந்தவன் என்று அழைக்கிறான்.
தவத்தில் சிறந்தவன்.
தவத்தினால் பல வரங்களை வென்றவன்.
ஆரிய என்றும் ஆய் மறை வல்லோய்! என்றும் அழைக்கப் பெற்றவன்.
'திறத் திறனாலே, செய் தவம்
முற்றித் திரு உற்றாய்,
மறத் திறனாலோ? சொல்லுதி-சொல்
ஆய் மறை வல்லோய்!
அறத் திறனாலே எய்தினை அன்றோ?
சொல் ஆய் மறை வல்லோய்! - தேர்ந்தெடுக்கப் பட்ட சொற்களால் ஆன வேதங்களில் நிபுணனே!
நீ இதுவரை பெற்ற செல்வம் எல்லாம் வேதத்தின் படி, அற வழி நின்று தவப் பயனால் பெற்றதே அன்றி மற்ற வழியால் அல்ல என்று மாரீசன் சொல்லும் போதும் வேத வித்தகன் என்று அழைக்கிறான்.
இத்தனை கற்றும் அறவழி நில்லாததால் தன் குலம் அழிய காரணம் ஆனான்.
தவத்தினால் பல (மோசடி) வரங்களைப் பெற்ற ராவணன் பிறிதொருவர் தவம் செய்யாதவாரு பார்த்துக் கொண்டான்.
தன் சகோதரனாகிய குபேரனிடமிருந்து நாட்டைப் பறித்துக் கொண்டான்.
மறைப் பொருள் அறிந்தும் தவறு செய்தான்.
வரம் கொடுத்த சிவனிடம் அதைப் பிரயோகம் செய்தான். கயிலையை பெயர்த்து தூக்கியதால், வரத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்கு ஆளானான். சிவனின் சினத்துக்கு ஆளானான்.
பூதலிங்க சுவாமி வீதி உலா வருவது இந்த கயிலாய பர்வத சப்பரத்தில்.
ராவணன் அகந்தை அழிய தன் கால் பெருவிரலால் அமிழ்த்தியபடி வரும் காட்சி இது.
கண் விழிப் பிதுங்க ராவணன் கயிலையை தூக்கி வரும் காட்சி.
இது கயிலாய பர்வத காட்சி, ராவண காட்சி அல்ல.
கற்றவர் தவறு செய்தால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் அதிகம்.
முன்னர் மாலி, மாலியவான், சுமாலிக்கு கிடைக்காத தண்டனைக்கு ராவணன் ஆளானான்.
ஏனென்றால் கற்றும், தேர்ந்தும், தெளிந்தும் அவன் தவறு செய்தான்.
இதை பாரதி
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று போவான்
என்கிறான்.


கருத்துகள்
கருத்துரையிடுக