பற்று அவா இரண்டும் ஒன்றா?
பற்று அவா இரண்டும் ஒன்றா?
நான், எனது என்பது அகங்காரம். இது மமகாராம் என்னும் அகப்பற்று.
என்னுடையது, என் பொருள் என்பது புறப்பற்று.
எனக்கு இந்தப் பொருள் வேண்டும், அந்தப் பொருள் வேண்டும் என்று இல்லாத பொருள் மேல் கொள்வது அவா.
இதை கவிச்சக்கரவர்த்தி கம்பன்,
பற்று அவா வேர் ஒடு உம்
பசை அறப் பிறவி போய்
முற்ற வால் உணர்வு மேல்
முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன் இருந்து யோகு
செய்தனன் எனில்
சொற்ற ஆம் அளவதோ
மற்று இதன் தூய்மையே.
இந்த இடத்தின் தூய்மையை என்னால் சொல்லவும் முடியுமோ?
மனிதனுடைய ஆசைகளையும், பந்தங்களையும், வேரோடு அழித்து, பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து நம்மை விடுவிக்கும் மெஞ்ஞான மெஞ்ஞான பெற்ற பெரியவர்கள் சென்று அடையும் பரம் பொருளான சிவா பெருமான் தவம் செய்யும் இடம் இது என்றால், இந்த இடத்தின் பெருமையை சொல்லவும் முடியுமோ?
பற்று அவா - அகப்பற்று, புறப்பற்று மற்றும் ஆசை;
வேர் ஒடு உம் பசை அறப் - அடியோடு முற்றிலும் அழிய
பிறவி போய் முற்ற - பிறப்பு முடிவடைய
வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு - தத்துவ ஞானமடைந்த பெரியோர்களின் சிந்தை
சென்று உற்ற வானவன் - சென்று அடைகின்ற சிவபெருமான், யோகம் செய்யும் இடம்.
பற்று என்பது பெற்றதன் மேல் உள்ளது
அவா என்பது பெறாததன் மேல் ஏற்படுவது - ஆசை!
இதையே நம்மாழ்வார்
அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர் என்கிறார்.
வீடுமின் முற்றவும் என்ற பத்தில் பற்றும், வீடு பேறு பெறுவது பற்றியும் அழகாக சொல்கிறார்.
எம்பெருமானை வழிபடுவதற்கு அடைவதற்கு இடையூறாக உள்ள எல்லாவற்றையும் அடியோடு விட்டு விடுங்கள். அவற்றை விட்டு,சிந்தையை விருப்பத்தை மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய எம்பெருமான் மீது செலுத்துங்கள் என்கிறார்.
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடு உடையான் இடை வீடு செய்ம்மினே
மற்ற விஷயங்களில் ஏற்பட்ட பற்று விடப்பட்டவுடனே ஆத்மா இந்திர பதவியைப் பெற்று விடும். ஆனால் நம்முடைய குறிக்கோள் என்ன? பிறப்பு இறப்பு அற்ற நிலை. இந்த பற்றையும் விட்டு விட்டு பரம்பொருளின் மீது பற்று வையுங்கள் என்கிறார்.
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அது பிறப்பை அறுக்கும். .
அவ்வாறாக செய்து நம்மாழ்வார் திருவடி அடைந்தலை
அவா அற்று வீடுப் பெற்ற குருகூர் சடகோபன் என்கிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்றற்ற இறைவனின் திருவடிகளைப் பற்றுங்கள். அதுவொன்றே நம்முடைய மற்ற பற்றுக்களை விடுவதற்கு வழி.
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே
பதிலளிநீக்குஎன்பது பட்டினத்தார் வாக்கு.
உங்கள் பதிவுகள் படிக்க படிக்க மெய் சிலிர்த்து இன்னும் படிக்க தூண்டுகிறது.
அற்புதம் 🙏
இதற்கான செயல்முறையை ராமகிருஷ்ணர் வரங்குகிறார். கலியுகத்தில் இந்த ஆசாபாசங்களின் வேகம் அதிகம் என்பதால் காமினி காஞ்சன வேட்கை அதிகமாக இருக்கும். துறவு என்பது கடினம். ஆகையால் தத்தம் இல்லம் என்கிற கோட்டைக்குள் ருந்து கொண்டே போர் செய்யச் சொல்கிறீர். அனைத்து ஐஸ்வர்யங்களின் மீதும் ஆசை கொண்டாலும் அவை யாவையும் இறைவனுக்காக என்று எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். ஆசைக்கு ஆசையும் அடங்கி விடும், பக்தியும் சம்பதமாகி விடும் என்கிறார்.
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை ஜெயந்தி.