கம்ப ராமாயண அரங்கேற்றம்

சிரித்தது செங்கட் சீயம் - கம்ப ராமாயண அரங்கேற்றம்

 

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

 

கல்வியில் பெரியான்  கம்பன் தன்னுடைய ஆழ்ந்த பக்தி மற்றும் காதலினால் ஆதிகவி வால்மீகி ராமாயணத்தை பின்பற்றி வழி நூலாக ராம காதையை இயற்றினார்.

 

இந்த நூலை அரங்கேற்ற கற்றறிந்தார் போற்றும் திருவரங்கமே சிறந்த அரங்கம் என்று எண்ணிய கம்பன் அரங்கத்து அறிஞர்களிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்.

 

அவர்களோ தில்லை அந்தணர்களின் அனுமதியைப் பெற்று வரவும் என்றனர்.

 

கம்பன் தன் ஏடுகளோடு சிதம்பரம் நோக்கி சென்றான்.

தில்லை அந்தணர்கள் 3000 பேரும் கூடியிருந்தால் மட்டும் ஓலையில் முத்திரை அளிக்க முடியும். அது நடக்காத காரியம் என்றனர்.

 

கம்பன் தான் எடுத்த முயற்சியை கை விடாமல் தொடர்ந்து பல நாட்களாக அந்தணர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் திடீரென தில்லை அந்தணர் 3000

பேரும் ஒரு வீட்டின் முன்பு கூடியிருந்தனர்.  பாம்பு தீண்டி இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்காக  அவர்கள் குழுமியிருந்தனர்.

கம்பனை கண்ட அவர்கள் இங்கும் வந்துவிட்டாயா என்ற தொனியில் பார்த்தனர்.

 

கம்பன் தன ஓலை சுவடியிலிருந்து நாக பாசப் படலத்தை பாடலானார்.

இந்திரஜித் போரில் நாக பாணத்திற்கு கட்டுண்ட லக்ஷ்மணனை  காக்க, பெரிய திருவடி கருடன் வானில் தோன்றி கொடிய நாகங்களின் கட்டை அவிழ்க்கும் படலம் இது.

 

பாசம் கலந்த பசிபோல் அகன்ற
   
பதகன் துரந்த உரகம்.

பசி அகலுவது போல் பாதகன் செலுத்திய பாணங்கள் விலகின என்றும் 

 

பல்லாயிரத்தின் முடியாத பக்கம்
     
அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள்ஆதல் செல்ல,
     
உடல் நின்ற வாளி சிதறுற்று

 

என்று கருடன் தன் பல ஆயிரக்கணக்கிலும் முடியாத இறகுகளை பொருந்திய இறக்கையை கருடன் வீச அதனால் வந்து பரவுகின்ற காற்று நாகக்கணையின் பிடியிலிருந்து அனைவரையும் விளக்கியது .

 

மயங்கிக் கிடந்தவர்கள் உடலில் தைத்த அம்புகள் விழுந்து சிதறின.

இதை பாடவும் நாகத்தின் விஷம் இறங்கி பாலகன் உயிர் பெற்று எழுந்தான்.

 

தில்லை அந்தணர்கள் திருவெண்ணெய் நல்லூர் வந்து நற்சான்றிதழ் வழங்கினர்.

 

அரங்கேற்றத்துக்கு எல்லா ஏற்பாடும் செய்ய நாதமுனிகள் கம்பனை தாயார் சந்நிதி முன் தனி மண்டபம் எழுப்பச் சொன்னார். அது இன்றும் கம்பராமாயண மண்டபம் என்று வழங்கி வருகிறது.

 

அரங்கேற்றுத்துக்கு முன் நாதமுனிகள் கம்பனை நோக்கி நம் சடகோபனை பாடினீரோ என்று கேட்க 

தேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவில் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே

என்று சிறப்பு பாயிரத்தோடு சடகோபர் அந்தாதி நூலை இயற்றுகிறார்.

 

கம்பன் தன் ராமாவதாரத்தை ஒவ்வொரு பாடலாகப் பாட அறிஞர்கள் கேள்வி எழுப்ப அரங்கேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.

 

யுத்தகாண்டத்தில் ராமன் வலிமை பொருந்திய திருமால் என்பதை உணரத்த விபீஷணன் ராவணனுக்கு இரணிய வதைப் பற்றி சொல்லும் காட்சி வருகிறது.

 

அறிஞர்கள் தங்கள் ஆட்சேபத்தை தெரிவிக்கிறார்கள். மூல நூலில் இல்லை என்கிறார்கள். கம்பன் தன் நியாயத்தைச் சொல்லி தொடர்கிறார்.


அப்படியாக கதை வளர்ந்து வரும் போது 

நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்!

 

எங்கையாவது சிங்கம் சிரிக்குமா என்று அனைவரும் நகைக்கிறார்கள்.

 

மகனிடம் நன்று நன்று என்று சொல்லி ஆத்திரத்தோடு இங்கு இருப்பானா என்று இரணியன் தூணை தட்ட தூணை பிளந்துக் கொண்டு அண்டம் வெடிக்கும் படி சிங்கப்பிரான் சிரித்துக் கொண்டு தோன்றினார்  - சிரித்தது செங்கட் சீயம்.

 

அவையோர் சிரித்துக் கொண்டிருக்கும் போது அந்த மண்டபத்தில் இருந்த நரசிம்ஹன் தன் இரு கைகளையும் நீட்டி அரங்கமே அதிரும் படி சிரித்தது செங்கட் சீயம்.

 

அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். கம்பன் எழுதிய காதையை ஏற்றுக் கொண்டனர். அதுவரை அமைதியாகி இருந்த நாத முனிகள் ஆனந்தத்தில் மூழ்கினார்.

 

கம்பனுக்கு கவி சக்கரவர்த்தி கம்பன் என்று பட்டம் சூட்டினார் நாதமுனிகள்.

 

 

எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழன்மேற் சடையன்வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே 

 

கம்பநாடன்
பண்ணிய விராம காதை பங்குனி யத்த நாளில்
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே

 

என்ற பாடலால் பங்குனி ஹஸ்தத்தில் கம்பனின் ராமாவதாரம் அரங்கேறிய வரலாற்று செய்தி நமக்கு கிடைக்கிறது.


https://youtu.be/Pj-zlf7ng6Q


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23