கனவு மெய்ப்பட வேண்டும்
தென்திருப்பேரை
இந்த ஊரில் கோவில் கொண்டுள்ள சுவாமி மகர நெடுங் குழைக்காதனுக்கு ப்ரஹ்மோத்சவம் நடைப் பெற்று வருகிறது.
இன்று ஐந்தாம் திருநாள்.
பெருமாள் கருட வாகனத்தில் சேர்வை சாதிக்கிறார்.
செம்பொன் குன்றின் மேல் தோன்றினான் என்று கம்பன் சொல்வது போல் இருக்கும் இந்த கருடவாஹன காட்சி.
தங்கத்தால் ஆன ஐந்தடி கருடன் மேல் அருமையான கொலு மேளத்துக்கும் மல்லாரிக்கும் அசைந்து வருவது ஒரு தேவலோக காட்சி போல் இருக்கும்.
நம்மாழ்வார் வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி என்ற பாசுரத்தில் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளை கடாவுகின்ற ஆற்றை காணீர் என்கிறார். தன்னை பெண்ணாக பாவித்துக் கொண்டு, மணிவண்ணன் புள் அரசனாகிய கருடன் மீது பறக்கும் காட்சியை பாடுகிறார்.
பொதுவாக வைணவத் திருக்கோயில்களில் பெருமாள் சந்நிதிக்கு நேர் எதிரே கருடன் சந்நிதி அமைந்து இருக்கும்.
தென்திருப்பேரையில் வேத ஒலியும், விழா ஒலியும், பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் காணவும் கேட்கவும் வழி விட்டு சற்றே தள்ளியிரும் பிள்ளாய் என்று பெருமாள் சொல்ல சந்நிதி கருடன் வழி விட்டு விலகி இருக்கிறார் .
முன்பொரு நாள் எங்கள் ஊரின் மூதாதையர் ஒருவர் அதிகாலையில் தான் ஒரு கனவு கண்டதாக சொல்லி வீட்டில் விளக்கேற்றி வைக்க சொன்னார்.
அன்று கனவில் பெருமாள் தோன்றியதாகவும் கூடிய விரைவில் புதையல் ஒன்றும் கிடைக்கும் என்றும் அதைக் கொண்டு தனக்கு வாகனம் செய்யும்படி உத்தரவானதாகவும் சொன்னார். குடும்பத்தோடு பெருமாளை வணங்கினார்.
சில நாட்கள் கழித்து, ஒரு அதிகாலையில் உழவன் வந்து உடனடியாக வயலுக்கு வாருங்கள். கலப்பையை போட்டால் 'டங்' என்று சத்தம் கேட்கிறது என்றார்.
வயலுக்கு சென்று பார்த்தால் இரெண்டு செப்பானைகள் கிடைத்தது. அதில் ஒன்றில் 50 தங்க குழல்கள். மற்றொன்றில் 50 வெள்ளிக் குழல்கள்.
ஊருக்குள் வந்தார் கருட வாகன பணியை துவக்கினார். அழகான, கம்பீரமான தங்கத்தால் வாகனம் வடித்தார். மேலும் தங்கம் தேவைப் பட தன் கையிலிருந்தும் சேர்த்து பணியை நிறைவு செய்தார். அதை கோவிலுக்கு அர்ப்பணித்தார்.
இன்று எங்கள் நிகரில் முகில் வண்ணன், மகர நெடுங்குழைக்காதன் அதில் வீதி உலா வருகிறான்.
இவை என்றோ எந்த நூற்றாண்டிலோ நடந்த நிகழ்ச்சி அல்ல. இவை நடந்தது 1940 இல்.
எங்கள் ஊரில் பலருக்கு கருடப்பன் என்று பெயர். எங்கள் இல்லத்துக்கு கருட மணிவண்ணன் திருமாளிகை என்று பெயர். என் சகோதரனுக்கு வைநதேயன் என்று பெயர். என் பூட்டனார் கருடப்பன். அந்த கனவு கண்ட தாத்தா என் பாட்டியின் தாத்தா. நாரணமங்கலத்தார் என்ற குடும்ப பெயரால் வழங்கப்படும் எங்கள் மூதாதையர்.
இன்று ஐந்தாம் திருநாள்.





கருத்துகள்
கருத்துரையிடுக