பாசுரப்படி ராமாயணம் Part - 10
பாசுரப்படி ராமாயணம்
Part - 10
அயோத்தியா காண்டம்
கொடியவள் வாய்க்கடிய சொற்கேட்டு
மலக்கிய மாமனத்தினனாய் மன்னவனும்மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இருநிலத்தை வேண்டாது
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து
மைவாய களிறொழிந்து மாஓழிந்து தேர்ஒழிந்து
கலன் அணியாதே காமர் எழில்விழல் உடுத்து
அங்கங்கள் அழகுமாறி
மான்அமரும் மெல் நோக்கி வைதேகி இன்துணையா
இளங்கோவும் வாளும் வில்லும்கொண்டுபின் செல்லக்
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்
கூனியின் சொல்கேட்டு, மனம் மாறிய கைகேயி தசரதனிடம் இரெண்டு வரங்களைப் பெற்றாள்.
கலங்கிய மனம் கொண்டவனாய் தசரதன் தவிக்க,
குலக் கொழுந்தான ராமன், அரண்மனை விட்டு, அரசு துறந்து, பெற்ற தாயாரை விட்டு, பிறந்த மண்ணை விட்டு, பட்டாபிஷேகம் துறந்து, பட்டத்து யானையை விட்டு, தேரை விட்டு, நாட்டை விட்டு, அணிகலன் களை விட்டு, மரவுறி தரித்து, உரு மாறி, கையில் வில்லும் அம்பும் ஏந்தி, மை விழியாள் ஜானகியுடன், தம்பி இலக்குமணன் பின் தொடர 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய நாடு விட்டு காடு போய் சேர்ந்தான்.
கலை மானும், காட்டு யானையும், குதிரையும் நடமாடும் கானம் என்று காட்டும் கொடுமையை சொல்லும்,
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்
என்ற திருமங்கை ஆழ்வாரி சாளகிராம பாசுரத்தை இங்கு ரசிக்கலாம்.
#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்

கருத்துகள்
கருத்துரையிடுக