பாசுரப்படி ராமாயணம் Part - 11
பாசுரப்படி ராமாயணம்
Part - 11
அயோத்தியா காண்டம்
நாடு துறந்து காடு சென்ற ராமன் கங்கையை அடைந்தான். அங்கே பக்தியோடு குகன் வந்து எதிர் கொண்டான்.
இதைக் கம்பன் "விரி திரைப் புனல் கங்கையை மேவினார்", அகண்டு விரிந்து நுரை ததும்பும் அலைகளையுடைய கங்கையை அடைந்தனர்.
கம்பன் குகனை அறிமுகப் படுத்தும்போது,
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர்க் குகன் எனும் நாமத்தான்
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல் திரள் தோளினான்.
அந்தக் காலையில், ஆயிரம் நாவாய்களுக்கு சொந்தக்காரன், தூய்மையான கங்கையில் பல ஆண்டுகளாக படகு ஓட்டுபவன், பகைவரை வெல்லும், சீறி பாயும் அம்புகளை உடையவன், கல் போன்ற தோள்களை உடையவன் அன்பன் குகன் என்ற பெயருடையவன் வந்தான் என்பான்.
பக்தியுடைக் குகன் கடத்தக்கங்கை தன்னைக் கடந்து
வனம் போய்ப்புக்கு காய்யோடு நீடு கனி உண்டு
வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண்துயின்று
குகன் ராமனை உபசரித்து தன்னோடு தங்கி விடுமாறு வேண்டினான், அதை மறுத்த ராமனை தன்னுடைய படகில் கங்கையைக் கடந்து அக்கரையில் விட்டான். அங்கிருந்து காட்டில் விளைகின்ற காயையும் கனியையும் உண்டு மரத்தின் நிழலில் கல்லை அணையாகக் கொண்டு திருப்பாற்கடலில் பாம்பணை மீது துயில் கொண்ட மூர்த்தி , இங்கு தூங்கினான்.
இதைக் கண்ட குகன், மனம் வருந்தி,
காதலன் உணர்த்துவான், ‘இப்
பார் குலாம் செல்வ! நின்னை
இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,
இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய!
செய்குவென் அடிமை ‘என்றான்.
இந்தப் பாரை ஆளுகின்ற செல்வம் படைத்தவனே! நீ இவ்வாறு கல்லில் துயில்வதை, துன்பத்தில் உழல்வதைக் கண்ட இக்கண்களை இன்னும் பிடிங்கி எறியாமல் இருக்கும் பாவியான். உன்னை பிரிய முடியாமல் தவிக்கிறேன் என்று "கார் குலாம் நிறத்தான்" ஆகிய ராமனிடம் கூறினான் அவனிடம் பேரன்பு கொண்ட குகன் கூறினான்.
அப்படி கூறிய குகனிடம் கங்கையைக் கடக்க நாவாய் கொண்டு வா என்று சொன்னான் ராமன்.
#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்

கருத்துகள்
கருத்துரையிடுக