பாசுரப்படி ராமாயணம் Part - 12
பாசுரப்படி ராமாயணம்
"சித்திரக்கூடத்து இருப்ப, தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ!
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் எறத் "
கங்கையைக் கடந்து சித்திரக்கூடம் வந்தடைந்தனர்.
அங்கு ராமனைப் பிரிந்த துயரால் வாடிய தயரதன், உன் மகன் பரதனுக்கு பழி ஏற்படுத்தி என்னையும் நீள் வானத்துக்கு செலுத்துவதால் என்ன பெற்றாய் கைகேயி! நானும் வானகம் செல்கிறேன் என்று தசரத சக்ரவர்த்தி வானேறினான்.
இந்த வரிகளும் பெருமாள் திருமொழியில் குலசேகர ஆழ்வார் பாசுரத்தில் இருந்து தொகுக்கப் பட்டுள்ளது.
கம்பன்,
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து,
ஒரு நெறி நின்ற
அனகன், அம் கணன், ஆயிரம்
பெயருடை அமலன்,
சனகன் மா மடமயிற்கு அந்தச்
சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம்
தெரிவுறக் காட்டும்.
தேவர்க்கும் மானுடர்க்கும் சம நிலையில் நின்று அருளும் ஆயிரம் நாமங்களையுடைய ராமன், சனகன் மா மடமயிற்கு - சனகனின் மக்களாகிய இளம் மான் போன்ற சீதா தேவிக்கு, சந்தன மரங்கள் நிறைந்த சித்ரக் கூட மலையை காண்பித்தான்.
அதே சமயம் கணக்கம் சென்ற ராமனை விட்டு திரும்பிய சுமந்திரனை பார்த்து ராமன் திரும்பி வந்து விட்டானா என்று தசரதன் கேட்டான். இல்லை என்ற பதில் வந்ததும் மனம் உடைந்து போனான்.
நாயகன், பின்னும், தன் தேர்ப்
பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ?’ என்று
உரைத்தலும், தேர் வலானும்,
‘வேய் உயர் கானம், தானும்,
தம்பியும், மிதிலைப் பொன்னும்,
போயினன்’ என்றான்; என்ற
போழ்தத்தே ஆவி போனான்.
தசரதன் மீண்டும் சுமந்திரனை நோக்கி சேயன் - ராமன் அருகில் இருக்கிறானா தொலைவில் இருக்கிறானா என்று கேட்க, அதற்கு சுமந்திரன் ராமனும் லக்ஷ்மணனும் மிதிலைப் பொன்னும் - மைத்திலியும் மூங்கில் உயர்ந்து வளர்ந்த காட்டுக்குள் சென்றார்கள் என்றான். அப்படி சொன்ன போதே ஆவி போனான் - தசரதன் உயிர் நீத்தான்.
#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்

கருத்துகள்
கருத்துரையிடுக