பாசுரப்படி ராமாயணம் Part - 14

பாசுரப்படி ராமாயணம்

Part - 14
அயோத்தியா காண்டம்
தம்பிக்கு மரவடியைவான் பணையம் வைத்துக் குவலயமும்
துங்கக்கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளிவிடை கொடுத்துத்
திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்
தண்டகாரண்யம் புகுந்து
தேரரும், பட்டத்து யானையும், குதிரையும், படையும், வசிஷ்டரும் சூழ வந்த பரதனுக்கு ராஜ்ஜிய பரிபாலனைத்தை கொடுத்து, அவனது மரவடியையும் கொடுத்து அனுப்பி வைத்தான்
அதன் பின் தந்தையின் சொல்லைக் காக்க தம்பியோடும் தேவியோடும் தண்டகாரண்ய வனம் சென்றான்.
கம்பன்,
அடித் தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித் தலம் இவை என முறையின் சூடினான்;
படித் தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்.
உடெம்பெலாம் புழுதி படியும்படி மண்ணில் விழுந்து வணங்கிய பரதன், கண்ணீர் பெருகிய கண்களோடு, ராமனின் மரவடிகள் இரண்டையும் எனக்கு திருமுடி இவையே என்று தலையில் சூடினான்.
அப்படி சித்திரக் கூடத்திலிருந்து வந்த பரதன் அயோத்திக்கு வெளியில் உள்ள நந்தியம்பதி என்ற இடத்தில் தவக் கோலத்தோடு வீற்றிருந்தான்.
நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்,
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.
இரவும் பகலும் அழுது கொண்டிருந்த பரதன், நந்தியம்பதியில், ராமனின் திருவடி நிலை வைத்து, ஐம்புலன் அடக்கி அரசாட்சி செய்தான்.
அதே நேரம்,
“குன்றினில் இருந்தனன்” என்னும் கொள்கையால்,
நின்றவர் நலிவரால், நேயத்தால்” எனா,
தன் துணைத் தம்பியும் தானும் தையலும்
தென் திசை நெறியினைச் சேறல் மேயினான்.
ராமன் இங்கு இருக்கிறான் என்று தெரிந்து அவனைக் காண அடிக்கடி வரக் கூடும் என்று கருதி சித்திரக் கூடம் விட்டு தென்திசை நோக்கி தம்பியோடும், துணையோடும் போனான்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23